தமிழக செய்திகள்

தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக பாராட்டுகிறது: திருமாவளவன் பேச்சு

ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைந்துவிட்டது என சிலர் வதந்திகளை பரப்பினர். வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ஜென்சி தலைமுறையினர் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். மாநாட்டில் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது, உயிர் சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் எனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டேன். வி.சி.க.வினர் ஒழுங்கீனமானவர்கள் என சமூக ஊடகங்களில் சித்தரிக்க தொடங்கினர். தமிழக அரசியல் களத்தில் ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என பாராட்டினார். வருகிற 29-ந் தேதி மாநாட்டு மலர் சென்னையில் வெளியிடப்படும். மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு. இதை வி.சி.க. உரக்க பேசி வருகிறது. மாநில சுயாட்சி கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.

சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது. தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.விடம் தனித்து நில்லுங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்து நின்றாலே உங்கள் செல்வாக்கு நிலைத்து நிற்கும் என கூறினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியை வி.சி.க. பாராட்டுகிறது. இந்த 100 நாள் என்பது த.வெ.க.விற்கு கற்று கொள்ளும் காலம். 100 நாள் த.வெ.க. ஆட்சியில் எந்த துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை சம்பாதித்து சாதித்துள்ளார்கள். பலர் மனம் திறந்து இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும், ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். சௌகார் ஜானகி மறைவு எனக்கு துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.