தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் வி.சி.க.: அமைச்சராக பதவியேற்கிறார் வன்னிஅரசு

சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.

சென்னை,

தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றனர்.

இதனைத்தொடர்ந்து புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தசூழலில், இன்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங்கிரஸ் கட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க.வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை. மேலும் தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனிடையே தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஐ.யு,எம்.எல். கட்சியின் பரிந்துரையை ஏற்று முதல்-அமைச்சர் விஜய் கவர்னருக்கு அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு நாளை காலை முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. திருமாவளவன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ள ஐ.யு.எம்.எல்.-கட்சிக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.