திண்டிவனம்,
திண்டிவனத்தில் நடந்த விசிக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-
தமிழகத்தில் த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால் வி.சி.க.வின் நிலை என்ன? என்று பலர் கேட்டுக்கொண்டிருக் கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதற்கு பதில் சொல்லி பதில் சொல்லி வாயும் வலித்துவிட்டது. கேட்டு கேட்டு காதும் வலிக்கிறது. ஒரே வழிதான். சாதிய மதவாத பா.ம.க., மதவாத பாஜகவோடு விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று முழங்கியவர் நம்முடைய தலைவர் திருமாவளவன்.
இப்பொழுதும் சொல்கிறேன். ஒருபோதும் அதற்கான வாய்ப்பில்லை. பா.ம.க. உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான் அதனுடைய பிரகடனம். எங்களுக்கு பதவி முக்கியமல்ல. நம்முடைய தலைவர் எதை கட்டளையிடுகிறாரோ அந்த வேலையை செய்வதற்குத்தான் ஒரு அடிமட்ட தொண்டராக இருந்து இந்த இடத்திலே களமாடுகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் புறக்கணிப்பு பாதையில் நின்ற இயக்கம். எங்களுக்கு இந்த தேர்தல் பாதை முக்கியமல்ல. விடுதலை சிறுத்தைகள் இயக்கம் மற்ற அ.தி.மு.க.. தி.மு.க. போன்ற சராசரி கட்சி அல்ல. இது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைக்காக களமாடுகின்ற இயக்கம். இந்த இயக்கம் எப்போதும் விடுதலைக்காக, விடுதலையை நோக்கி, விடுதலையை நேசிக்கக்கூடிய இயக்கம். விடுதலைதான் நம்முடைய உயிர் மூச்சு. அந்த வகையில்தான் இந்த மண்ணிலே நாம் ஒவ்வொரு தொண்டராக களமாடுகிறோம்.
இன்றைக்கு தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்புவாதம் செய்பவர்கள், போலி தமிழ் தேசியவாதிகள், சாதியவாதிகள் இன்றைக்கு பிரபாகரன் பெயரை வைத்துக்கொண்டு பிழைப்புவாதம் செய்தபோது நாம் மட்டும்தான் கொள்கை ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த கொள்கையின் அடித்தளம் என்பது சாதி ஒழிப்பு. நமக்கு தேர்தல்கள் வரும்.. போகும். ஆனால் மக்களுடைய விடுதலைதான் சாதிய ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை, சனாதனத்திலிருந்து விடுதலை. இதுதான் நம்முடைய உயிர் மூச்சு. இவ்வாறு அவர் பேசினார்.