தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தாலும், தற்போது வரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் நேற்று 7-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் போலீசாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விளாத்திகுளம் பகுதி செல்போன் கடை உரிமையாளர்கள் நேற்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் பேருந்து நிலையம், மதுரை சாலை, எட்டயபுரம் சாலை மற்றும் வேம்பார் சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் வணிகர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.