சென்னை,
தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் இன்று (8.11.2026) சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
“தேம்பாவணி” என்னும் தமிழ் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே அவரது இயற்பெயர். கி.பி.1710-இல் இந்தியாவுக்கு வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் உள்ளிட்ட பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார்.
தம் தாய்மொழி அல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும், செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்ந்தார்.
மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். தொன்னூல் விளக்கம் குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது. இப்படி பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது தமிழில் மட்டுமன்று; உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும், செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே ஆகும்.
திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் மொழிப்பெயர்த்தார். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருகதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் அவர்கள் 1747-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே இயற்கை எய்தினார்.
இந்நிகழ்ச்சியில், , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.