ராட்சத குழாய் 
தமிழக செய்திகள்

திண்டிவனம் அருகே வீராணம் குடிநீர் குழாய் உடைந்து அருவிபோல் கொட்டிய தண்ணீர்

குழாயில் இருந்து வெளியேறிய பெருமளவு தண்ணீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கரிக்கம்பட்டி பகுதியில், சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் வீராணம் ராட்சத குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் தண்ணீர் அருவிபோல் பீறிட்டு வெளியேறியது. இதனால் அருகிலுள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

அருவிபோல் பீறிட்ட தண்ணீர்

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் விழுப்புரம் மாவட்டம் வழியாகச் செல்கின்றன. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள கரிக்கம்பட்டி பகுதியில் செல்லும் குழாயில் இன்று (புதன்கிழமை) அதிக அழுத்தம் காரணமாகத் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் வழியாகப் பல அடி உயரத்திற்குத் தண்ணீர் அருவிபோல் பீய்ச்சி அடித்து வெளியேறியதை அவ்வழியே சென்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

பயிர்கள் சேதமடையும் அபாயம்

குழாயில் இருந்து வெளியேறிய பெருமளவு தண்ணீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் கரும்புப் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடையும் நிலை உருவாகியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

நவம்பர் 14-ல் சீரமைப்புப் பணி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்தனர். வரும் நவம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளின் போது, குடிநீர் விநியோகத்தை நிறுத்தி இந்தக் குழாய் உடைப்பு முழுமையாகச் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT