தமிழக செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம் - நயினார் நாகேந்திரன்

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வீரத்தின் அடையாளமாகவும், விடுதலை உணர்வின் திருவுருவமாகவும் திகழ்ந்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று!

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், அந்நிய ஆட்சிக்கும் அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் துணிச்சலுடன் போராடிய அவரது வீரமும், தன்னலமற்ற தியாகமும் இந்திய வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

தாய்மண்ணின் மானத்தையும், மக்களின் உரிமைகளையும் காக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம். அவரது வீர வரலாறு தலைமுறைகள் தோறும் நம் இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT