தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியி்ட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் 8.5.2026 மற்றும் 9.5.2026 அன்று ஸ்ரீவீரசக்க தேவி உற்சவ விழா நடைபெறவுள்ளது. இந்த நாளில் விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 7.5.2026 மாலை 6 மணி முதல் 10.5.2026 காலை 6 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1)-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163(1)-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.