தமிழக செய்திகள்

வீரவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: ராயபுரம் த.வெ.க. வேட்பாளர் மீது புகார்

சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வீரவாளால் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 108 தொகுதிகளைக் கைப்பற்றியது தமிழக வெற்றிக் கழகம். இந்த நிலையில் சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய த.வெ.க. வேட்பாளர் விஜய் தாமுவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள்.

தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானது மற்றும் பிறந்த நாள் என இரண்டையும் அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் சுமார் 2 அடி நீளமுள்ள வீரவாளை அவருக்கு பரிசாக கொடுத்தனர். அந்த வீரவாளை கையில் வாங்கிய விஜய் தாமு, அதனை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்தார். பின்னர், அதே வாளைக் கொண்டு பிறந்தநாள் கேக்கை வெட்டினார்.

ஏற்கனவே ரவுடிகள் மற்றும் ரீல்ஸ் மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் இதுபோன்று வாளால் கேக் வெட்டும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியது. எனவே இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து கேக் வெட்டினால் சிறை தண்டனை உறுதி என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற 2 நாளில் த.வெ.க. எம்.எல்.ஏ.வின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீரவாளால் அவர் கேக் வெட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அக்கட்சியினர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனை தொடர்ந்து ராயபுரம் தொகுதியின் த.வெ.க. வேட்பாளர் விஜய்தாமுவை கைது செய்யக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டிஜிபி அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.