தமிழக செய்திகள்

கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதி விபத்து: உரிமையாளர் உயிரிழப்பு

மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற காய்கறி லாரி, பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னர் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

பாளையங்கோட்டை,

பாளையங்கோட்டை அருகே நான்குவழிச் சாலையில் கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதிய கோர விபத்தில், லாரியின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காய்கறி லாரி

மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி மினி லாரி ஒன்று, இன்று அதிகாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் கலைக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியின் முன்பக்க இடதுபுற இருக்கையில் லாரியின் உரிமையாளரான தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் காசிலிங்கம் (வயது 56) அமர்ந்திருந்தார்.

கண்டெய்னர் லாரி

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதி நான்கு வழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, முன்னர் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக காய்கறி லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் லாரியின் இடதுபக்கம் பலத்த சேதமடைந்ததில், அங்கு அமர்ந்திருந்த லாரி உரிமையாளர் காசிலிங்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் கலைக்குமார் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மீட்புப் படையினர் மற்றும் போலீசார், லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காசிலிங்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT