வேளாங்கண்ணி,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பூட்டப்படுவது வழக்கம். இந்த நிலையில் வேளாங்கண்ணி பேராலயத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாதம் 3-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும் என பேராலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேராலயம் 24 மணி நேரமும் திறந்து இருந்தால் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும், எனவே இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் பேராலய நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து நேற்று முதல் 24 மணி நேரமும் வழிபாட்டுக்கு பேராலயம் திறந்து இருக்கும் என்ற அறிவிப்பு தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் பேராலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.