வேலூர்
வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி நகரில் திருவலம் அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் தேவாலயம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் இன்று மாலை கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், பலர் சிக்கி கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், காட்பாடி எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அதிநவீன மீட்பு உபகரணங்கள் உடன் சம்பவ இடத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும் விரைந்துள்ளது. இந்த நிலையில் தேவாலய விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது. எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.