வேலூர்,
வேலூரில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கொலை குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (43 வயது), பா.ம.க. பிரமுகர். இதே பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (28 வயது). இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை, நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட 13 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
பலமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற இவருக்கும், ஞானவேலுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியூருக்கு சென்றிருந்த ஞானவேல் தீபாவளிக்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று மாலை பேருந்து நிலையம் அருகே ஞானவேல் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த பூவரசன் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து ஞானவேலை நோக்கி சுட்டார்.
அதை தடுக்க முயன்ற ஓட்டல் தொழிலாளி ரகு (40 வயது) என்பவரையும் சுட்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ஞானவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரகுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் தப்ப முயன்ற பூவரசனை பிடித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பூவரசன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்வதற்காக அவர் மறைத்து வைத்திருந்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூவரசன், உதவி ஆய்வாளர் ராஜாவை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் பூவரசனை சுட்டுப் பிடித்தனர். காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் காயமடைந்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் பூவரசன் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.