தமிழக செய்திகள்

வேலூரில் பரபரப்பு: ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாக ஓய்வுபெற்ற அதிகாரி கைது

இருவரும் ஒரு ஆண்டாக 'வாட்ஸ் அப்' மற்றும் வீடியோ கால் மூலமாக ராணுவ ரகசியங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வேலூர்,

ராணுவ ரகசியங்களை பெண்ணிடம் பகிர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது52), ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை எதிரிக்கு தெரிவிப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மத்திய உளவுத்துறையினர் நேற்று கீழ்வல்லம் பகுதிக்கு வந்து, வீட்டில் இருந்த பாபுவை வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து போலீசார் பாபுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

ராணுவ ரகசியங்கள்

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ராணுவத்தில் டிரைனிங் பிரிவில் அட்லெரி கேப்டனாக பாபு பணிபுரிந்ததால், ராணுவ தளவாடம் சார்ந்த ரகசியங்களை தெரிந்து வைத்து உள்ளார்.

இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் என்.சி.சி. மாஸ்டராக பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் ஹெனி சர்மா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். இருவரும் ஒரு ஆண்டாக 'வாட்ஸ் அப்' மற்றும் வீடியோ கால் மூலமாக ராணுவ ரகசியங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒன்றாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தொடர்பான 'புராஜக்ட்" செய்து வருவதாகவும், அதற்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சார்ந்த தகவல்கள் குறித்து, பெண் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு உண்டான பதில்களை பாபு தெரிவித்து இருக்கிறார்.

விசாரணை

மேலும் கூடுதல் விவரங்களை ராணுவத்தில் விசாரித்தும் இருக்கிறார். இது குறித்து மத்திய உளவுத்துறைக்கு தகவல் சென்றது. அதன்பேரில் பாபுவிடம் விசாரணை செய்து, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினால் முழு தகவலும் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT