வேல்முருகன்  
தமிழக செய்திகள்

சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? - வேல்முருகன் கேள்வி

மலக்கழிவால் மாசுபட்ட நீர் மூலம் குழந்தைகள் கடுமையான வயிற்றுப்போக்கால் நீரிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

புழல் ஏரி

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்று நேற்றல்ல.பல ஆண்டுகளாகவே மாசுபாட்டின் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் ஆய்வுகள், நீதிமன்ற நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள் என அனைத்தும் இருந்தும், அதன் அடிப்படை பிரச்சினைக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

பசுமை தீர்ப்பாயம்

2017-ஆம் ஆண்டிலேயே புழல் ஏரியில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான செய்தியை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. விசாரணையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது பதிவானதுடன், ஒரு நிறுவனத்துக்கு ரூ.17.71 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுச்சூழல் இழப்பீடும் விதிக்கப்பட்டது.

ஆய்வு அறிக்கை

2021-ஆம் ஆண்டு நீதித்துறை ஆவணத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டுகிறது. புழல் ஏரியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் 100 மில்லிலிட்டருக்கு 93 என்ற அளவில் மலக்கழிவு கோலைபார்ம் பதிவாகியிருந்தது. அப்போது அருகிலுள்ள சடையங்குப்பம் பகுதியில் நிலவிய திறந்தவெளி மலம் கழிக்கும் நடைமுறையால் இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியது.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்

இப்போது 2026 பிப்ரவரியிலும் அதே புழல் ஏரியில் மீண்டும் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெங்கடேஷ்வரா நகர், புதூர், பானு நகர், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால்கள் வழியாக ஏரியை சென்றடைவதாகவும், சக்தி நகர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

எங்கே போயின?

2017-ல் புகார். 2021-ல் மலக்கழிவு மாசுபாடு பதிவாகிறது. 2026-ல் மீண்டும் அதே எச்சரிக்கை. அப்படியானால் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்கே போயின? இது ஒரு சாதாரண ஏரி பாதுகாப்பு பிரச்சினையல்ல. சென்னை மக்களின் குடிநீரின் பாதுகாப்பு, பொது சுகாதாரம், வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமை ஆகியவற்றை தொடும் பிரச்சினை ஆகும்.

நோய்கள் பரவும் அபாயம்

மலக்கழிவால் மாசுபட்ட நீர் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, வயிற்றுக்குடல் தொற்றுகள், டைபாய்டு, கல்லீரல் அழற்சி ‘ஏ’ உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் கடுமையான வயிற்றுப்போக்கால் நீரிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடும்.

எச்சரிக்கை

இன்று ஏரியில் கண்டறியப்பட்ட மாசுபாடு, நாளை மக்களின் உடல்நல பேராபத்தாக மாறிவிடக்கூடாது. ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே குடிநீராக வழங்கப்படுகிறது என்பதால், தற்போதே சென்னை மக்களின் குடிநீரில் நோய் பரவுகிறது என்று கூறவில்லை. ஆனால், குடிநீரின் மூல ஆதாரத்திலேயே மலக்கழிவு மாசுபாடு தொடர்ந்து கண்டறியப்படுவது மிகத் தீவிரமான எச்சரிக்கை ஆகும்.

சென்னை மக்கள்

மேலும், ஒரு புறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் ஏரியைச் சென்றடைவதாக தெரிவிக்கிறது. மறுபுறம் சென்னை குடிநீர் வாரியம் அதனை மறுக்கிறது. இந்த முரண்பாட்டில் சிக்கி தவிப்பது அதிகாரிகள் அல்ல. சென்னை மக்கள். எனவே, புழல் ஏரிக்குள் கழிவுநீர் செல்லும் ஒவ்வொரு வழித்தடத்தையும் உடனடியாக கண்டறிந்து நிரந்தரமாக தடுக்க வேண்டும்.

வெளியிட வேண்டும்

பாதாளச் சாக்கடை வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளுக்கும் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். புழல் ஏரியின் நீரை தொடர்ந்து அறிவியல் முறையில் பரிசோதித்து, அதன் முழுமையான முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

வெள்ளை அறிக்கை

2017 முதல் இதுவரை ஏரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?, நிறைவேற்றப்படாத பணிகள் எவை? என்பதைத் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கழிவுநீர் வெளியேற்றங்களையும் கண்டறிந்து உடனடியாகத் தடுக்க வேண்டும். புழல் ஏரியை சுற்றி நிரந்தர கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தி, கழிவுநீர் கலக்கும் இடங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இதற்கு யார் பொறுப்பு?

பல ஆண்டுகளாக எச்சரிக்கைகள் எழுந்தும் புழல் ஏரி இன்னும் பாதுகாப்பாகவில்லை என்றால், இதற்கு யார் பொறுப்பு? சென்னையின் உயிர்நாடியான புழல் ஏரியை கழிவுநீர் கால்வாயாக மாற்ற அனுமதிக்க முடியாது.

மக்களுக்கு நோய் வந்த பிறகு தீர்வு காண்பது சரியல்ல. வருமுன் காப்பதே சரியாகும். எனவே, புழல் ஏரியை பாதுகாக்க தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.