தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீ சார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக் டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கைதானவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்ததால் வருகிற 23-ந்தேதி (நாளை மறுநாள்) தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டு இருந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் சம்பவத்தில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.