தமிழக செய்திகள்

அய்யனாரூத்து கிராமத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்திய கால்நடை மருத்துவர்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள அய்யனாரூத்து கிராமத்தில் பலரது வீடுகளில் இருந்த ஆடுகள் நோய்வாய்பட்டு இறந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர்.

கயத்தாறு,

கயத்தாறு அருகிலுள்ள அய்யனாரூத்து கிராமத்தில் பலரது வீடுகளில் ஆடுகள் நோய்வாய்பட்டு இறந்து வந்த நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்கள் முகாம் அமைத்து ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆடுகள் பலி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள அய்யனாரூத்து கிராமத்தை சேர்ந்த அருணாசலம் மகன் கருப்பசாமி, விவசாயி. இவர் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இவரது மந்தையில் இருந்த ஆடுகள் திடீரென நோய்வாய்பட்டு தொடர்ந்து இறந்து வந்தன. இந்த வகையில் 16 ஆடுகள் இறந்து போயின. இதுமட்டுமின்றி அந்த ஊரிலுள்ள மற்ற விவசாயிகள் பலரது வீடுகளிலும் சில ஆடுகள் நோய்வாய்பட்டு இறந்தன. இப்பகுதி விவசாயிகளும் மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு ஊசி மருந்து செலுத்தியும் ஆடுகள் தொடர்ச்சியாக இறந்தன. இது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் இப்பகுதியில் முகாமிட்டு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நேற்று முன்தினம் தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள்

இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர் வேதிக் தலைமையில் மருத்துவர்கள் விக்னேஷ், செரீன்பரினா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குழுவினர் அய்யனாரூத்து கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினர். அய்யனாரூத்து மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஆடுகள் பலியாவது தடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், முகாம் நடத்திய கால்நடைத்துறையினருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

SCROLL FOR NEXT