சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 2006 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கு பிறகு, கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பொது கலந்தாய்வு நடைபெறாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வந்தோம். கடந்த ஆண்டு கலந்தாய்வு தொடங்கப்பட்டாலும், அதற்கான அரசாணை வழங்கப்படாமல் இருந்தது.
தற்போதைய த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுகுறித்த கோரிக்கையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரிடம் நேரில் முறையிட்டோம். உடனடியாக அவர் பொது கலந்தாய்வுக்கான அரசாணையை வெளியிட்டார். அதன்படி, கடந்த மாதம் 29-ந் தேதி 100 சதவீத வெளிப்படைத்தன்மையுடன் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய்க்கும், துறை அமைச்சருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 5 ஆயிரம் கால்நடை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.