தமிழக செய்திகள்

பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி: சத்தியபாமா, மரகதம் குமரவேல் கூட்டாக பேட்டி

சட்டப்பேரவையில் தவெகவின் பெரும்பான்மை 109 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ.வாக மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ.வாக சத்தியபாமாவும் பதவியேற்றனர்.

எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்ட சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேலுக்கு, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தவெக எம்.எல்.ஏ.க்கள் இருவர் பதவியேற்றதால் சட்டப்பேரவையில் தவெகவின் பெரும்பான்மை 109 ஆக உயர்ந்துள்ளது.

அதன் பின்னர் சத்தியபாமா, மரகதம் குமரவேல் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்த மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் வாய்ப்பளித்த முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி. எதிர்க்கட்சியினர் எங்களைப் பற்றி பொய் பிரசாரம் செய்தனர், அவதூறு பரப்பினர். ஒரு பெண் என்றும் பாராமல் எங்கள் மீது தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறு பரப்பினர்.

பொய் பிரச்சாரத்தால் மன உளைச்சலுக்கு நாங்கள் ஆளானோம். குதிரை பேரம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள், ஆனால் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. பெண்கள் என்றும் பாராமல் எங்களை இழிவுபடுத்தினார்கள். தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். முழுக்க முழுக்க தளபதி விஜய்க்காக வந்த வாக்கில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார்.

சத்தியபாமா கூறியதாவது, ”தாராபுரம் தொகுதியில் வெற்றியை கொடுத்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி.. மக்களே உற்சாகமாக வெற்றியை கொண்டாடுறாங்க.. தண்ணீர் பிரச்சனைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். இந்த வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தக்கூடிய வெற்றி" என்று கூறினார்.

SCROLL FOR NEXT