தமிழக செய்திகள்

2 தொகுதிகளிலும் வெற்றி: திருச்சி கிழக்கு தொகுதியை இவருக்கு விட்டுக்கொடுக்கிறாரா விஜய்..?

விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார்.

பொதுவாக, ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தேர்தல் ஆணைய விதிகளில் வழிவகை இருப்பதுபோல், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். அதாவது, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும்.

அந்த வகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள விஜய், ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். 2-ல் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, அவரது கட்சி தொண்டர்களையும் தாண்டி, தமிழக மக்களிடமும் இருக்கிறது.

த.வெ.க. தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். எனவே, அவர் அடிக்கடி வந்து செல்லும் வகையில் பெரம்பூர் தொகுதியே அருகில் இருப்பதால், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவே அவர் தொடர விரும்புவார் என்று கூறப்படுகிறது.

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். மற்ற கட்சிகளில், தற்போதைய வேட்பாளர்களே மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அதாவது தி.மு.க. சார்பில் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. சார்பில் க.ராஜசேகரன், நா.த.க. சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

அதே நேரத்தில், த.வெ.க. சார்பில் வேட்பாளராக களம் காணப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகை திரிஷா களம் காணலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.