சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது 1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தை ஆண்டு வந்த இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு சதவீதம்:-
அதுவும் தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே 34.92 சதவீத வாக்குகளை பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. திமுக 24.19 சதவீத வாக்குகளையும், அதிமுக 21.21 சதவீத வாக்குகளையும் பெற்றது.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்:-
தேர்தலில் தவெக அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும், அது ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகள் என்ற பெரும்பான்மையை எட்டவில்லை. இதனால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இரு கம்யூனிஸ்டுகள், ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தன.
ஆட்சியில் பங்கு
தவெகவில் இணைந்த கூட்டணி கட்சிகளுக்கு, ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி ஆட்சியில் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
1967-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை 59 ஆண்டுகள் தமிழகத்தை திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகளும் மாறி.. மாறி.. ஆட்சி செய்தன. தற்போது தமிழகத்தில் புதிதாக அமைந்த விஜய் தலைமையிலான தவெக அரசு, அரை நூற்றாண்டை கடந்த திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
தவெகவில் சேரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி குழப்பம் உச்சம் தொட்டது. அதிமுகவில் இரட்டை இலைகளாக இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்.பி.வேலு மணி தரப்பு ஒற்றை இலைகளாக பிரிந்து சென்றன. இந்த பிரச்சினைக்கு இடையே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் பலர் இணைந்த வண்ணம் உள்ளனர். இது அதிமுகவை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது.
தனித்து விடப்பட்ட திமுக
தேர்தலின்போது திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அசுர பலத்துடன் தேர்தலை சந்தித்தது. ஆனால், தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினே, தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். இது அவருக்கு மட்டுமின்றி, அக்கட்சி நிர்வாகிகளுக்கே பேரிடியாக அமைந்தது.
சீசன் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் வேடந்தாங்கல் பறவைகள் போல, தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் திமுகவைவிட்டு பிரிந்து தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இதனால், திமுக தனித்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், "இனிவரும் தேர்தல்களில் நாம் தனித்து களம் காண வேண்டும்" என்று திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.
தவெக - காங்கிரஸ் கூட்டணி
திமுக கூட்டணியில் இருந்துகொண்டு தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு 3.37 சதவீத வாக்குகள் கிடைத்தன. தற்போது, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பதால், வரும் காலங்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி நிலையான, நீண்டகால கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவுக்கும் தேசிய கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது.
அண்ணாமலையின் அதிரடி அறிவிப்பு
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுக தலைவர்களுடன் கருத்து மோதலில் ஈடுபட்டதால், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இதனால், மிகுந்த விரக்தியில் இருந்த அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகினார். மேலும், தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் vs அண்ணாமலை
1967 முதல் திமுக vs காங்கிரஸ், 1977 முதல் திமுக vs அதிமுக என்று நகர்ந்து வந்த தமிழக அரசியல் களம், தற்போது விஜய் vs யார்? என்ற நிலையில் தரைதட்டி நிற்கிறது. அந்த இடத்தை தனதாக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். விஜய்க்கு இருப்பதுபோல், அண்ணாமலைக்கும் இளைஞர் சக்தி இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி விஜய்க்கு மாற்று சக்தியாக உருவாகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திமுக, உதயநிதி ஸ்டாலின்
73 வயதான முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதி ஸ்டாலினை அரசியல் ரீதியிலான முன்னிறுத்தினார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியும், தனது மகனான மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவியை வழங்கினார். அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக உருவெடுத்தார். அதே முயற்சியை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருந்தார்.
ஆனால், விஜய்-யின் வருகை அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. விஜய்க்கு எதிராக உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் முயற்சியை திமுக கையில் எடுக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அண்ணாமலையின் புதிய கட்சி வருகை திமுகவின் அந்த முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் vs அண்ணாமலை என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் அது திமுகவுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்கள், பெண்கள்:
தமிழக தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்களும், பெண்களும் திகழ்கின்றனர். தவெக சுமார் 35 சதவீத வாக்குகளை வாங்க முதன்மை காரணமாக இளைஞர்களும், பெண்களும் திகழ்கின்றனர்.
இளைஞர்களையும், பெண்களையும் ஈர்க்கும் அரசியல் தலைவர்களே தமிழக அரசியலில் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்பது கடந்த தேர்தல்களில் இருந்து அரசியல் கட்சியினர் கற்றுக்கொண்ட பாடம். அதை தவெக தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் சரியாக கணித்துள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றம்;
விஜய் தலைமையிலான தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சியின் ஆட்சி உருவெடுத்துள்ளது. தவெக அரசியின் செயல்பாடுகளை பொறுத்து தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்வுகளை சந்திக்கும்.
விஜய், அண்ணாமலை போன்ற தலைவர்களின் வருகை இரு திராவிட கட்சிகளுக்கும் நீண்டகால மாற்றாக அமையுமா? அல்லது திராவிட கட்சிகளின் தற்காலிக சருக்கலா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.