தமிழக செய்திகள்

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம்; 5 விபத்துகளில் 15 பேர் காயம்: த.வெ.க. நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை, தூத்துக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது நடந்த விபத்துகளில் சிக்கி 15 தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி,

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்த விஜய்யை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பிரசார வேனில் ஏறி நெல்லை நோக்கி புறப்பட்டார். அவரது வேனை மோட்டார் சைக்கிள்களில் தொண்டர்கள் பின் தொடர்ந்து செல்வதை தவிர்ப்பதற்காக போலீசார் ஆங்காங்கே தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.

வாகைகுளம் பகுதியில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் விஜய் சென்ற வேனை பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் பிரசார வேனின் அருகே நெருங்கி சென்றனர். அப்போது ஒருவரையொருவர் முந்தி செல்ல முயன்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டது. கீழே விழந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் விஜய் நகர்வலம் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் பல இளைஞர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் சென்றனர். பொட்டல் விலக்கு முதல் தாழையூத்து செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மற்றொரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்தில் சிக்கினர். இதில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டையில் விஜய் வருகையை முன்னிட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்தனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலைபார்க்கும் துரை என்ற வாலிபர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் துரை மீது மோதியது. இதில் அவர் பஸ் சக்கரத்திற்குள் சிக்கி கொண்டார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக அந்த வாலிபரை மீட்டனர். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். ஆம்புலன்ஸ் வர நேரம் ஆனதால் அவர் தனது காரில் அந்த வாலிபரை ஏற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதேபோல் கே.டி.சி.நகர் பகுதியில் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் த.வெ.க. தலைவர் விஜயின் நேற்றைய பிரசார பயணத்தில் ஏற்பட்ட 5 விபத்துகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீசார் த.வெ.க. நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.