சென்னை,
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.
அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
மத்திய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும்.
ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் மத்திய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.
இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.