தமிழக செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றிக் கனியை சுவைத்த மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள்.

அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும். நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என்று தெரிவித்துள்ளார்.