சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 47 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனிடையே, 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. கட்சி, ஆட்சியமைக்க கவர்னரிடம் அனுமதி கேட்டும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் விஜய்யை ஆட்சியமைக்க கவர்னர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.
த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான இடங்களைப் பெறுவதற்கு ஆதரவு கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் அருண்ராஜ், சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், த.வெ.க. தலைவர் விஜய், சட்ட நிபுணர்களுடன் 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகள் உள்ளிட்டவை குறித்து சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.