தமிழக செய்திகள்

டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கெஜ்ரிவால் செய்ததை தமிழகத்தில் செய்து காட்டிய விஜய்

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிவிட்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது.

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 வாக்குகள் ஈ.வி.எம். எந்திரம் மூலமாகவும், தபால் வாக்குகளாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384-ம் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது வரை 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி செய்து காட்டியதை தற்போது தமிழகத்தில் விஜய் செய்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை இன்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முறியடித்துள்ளது. இதேபோல், டெல்லியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிவிட்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டது. பின்னர் 2015 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது.

அங்கு நிலவிய மும்முனைப் போட்டியில், டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 67-ல் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பா.ஜ.க. வெறும் 3 இடங்களை பெற்ற நிலையில், காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. டெல்லியின் முதல்-மந்திரியான கெஜ்ரிவால், 2024 செப்டம்பர் வரை அந்த பதவியில் இருந்தார்.

2010 காலகட்டங்களில் இந்தியா முழுவதும் பரவிய தீவிர ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில்தான் கெஜ்ரிவாலின் எழுச்சி வேரூன்றியிருந்தது. அந்த இயக்கம், மாற்று அரசியல் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கி, சாமானிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் எழுச்சி பெற்றது.

கெஜ்ரிவாலைப் போலவே, விஜய்யும் ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு, குறிப்பாக பாரம்பரிய அரசியலுக்கு எதிராக போராடுவதாக சபதம் எடுத்து, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து ஒரு பெரும் சவாலை மேற்கொண்டார்.

பாரம்பரிய அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகக் கூறிக்கொண்டாலும், இந்த இரு தலைவர்களும் இலவசங்களை வழங்குவதைத் தங்களது தேர்தல் உத்தியாக பயன்படுத்தியுள்ளனர். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, ஒவ்வொரு வீட்டிற்கும் 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 ஆதரவு மற்றும் பல்வேறு இதர வசதிகளை வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளார்.

இதே போல், கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதிகளான இலவச மின்சாரம், தண்ணீர், பெண்களுக்கான பேருந்து பயணம், முதியோருக்கான புனித யாத்திரை, சுகாதார வசதிகள் மற்றும் கல்வி ஆகியவை அவரது வெற்றிக்கான முக்கிய அம்சங்களாக அமைந்தன.

விஜய் மற்றும் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து கட்சியை தொடங்கி, மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட அரசியலில் உருவாகி இருக்கும் இந்த மாபெரும் மாற்றம், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஆம் ஆத்மியின் எழுச்சியை ஒத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.