சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-
திருச்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து ரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற நாளிலிருந்து நடைபெறுகிற சம்பவங்களைப் பார்த்தால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மதுபானத்தில் அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து குருதி தெறிக்க பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும்.
இவர்களைப் போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ? இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை சார்ந்தவர்களையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.