தமிழக செய்திகள்

விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார் விஜய் - த.வெ.க.

இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சொன்னதைச் செய்தார்!

முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!

ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.

"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.