சென்னை,
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள விஜயநாராயண், பள்ளி கல்வியை ராஞ்சியிலும், பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற பிரபல மூத்த வக்கீல் எம்.கே.நம்பியார் இவரது தாத்தா ஆவார். மத்திய அரசின் தற்போதைய அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால் இவரது தாய்மாமா ஆவார். 2004-ம் ஆண்டு மூத்த வக்கீல் அந்தஸ்து பெற்ற விஜய் நாராயண், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார்.
தற்போது மீண்டும் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள விஜயநாராயண் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.