தமிழக செய்திகள்

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்: கவர்னரை வலியுறுத்தி முதியவர் திடீர் சாலை மறியலால் பரபரப்பு

கோவில்பட்டியில் முதியவர் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டு, "விஜய்யை ஆட்சி அமைக்க அனுமதியுங்கள், இல்லையென்றால் என்னைக் கைது செய்யுங்கள்" என போலீசாரிடம் முரண்டு பிடித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 84) என்பவர் நேற்று திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை தலைமை தாங்கும் விஜய்யை, கவர்னர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

போராட்டத்தின் போது அவர் உரக்கக் கத்தியபடி, "விஜய்யை ஆட்சி அமைக்க அனுமதியுங்கள், இல்லையென்றால் என்னைக் கைது செய்யுங்கள்" என போலீசாரிடம் முரண்டு பிடித்தார். வயதான காலத்தில் அவர் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கலைந்து செல்ல மறுத்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அந்த முதியவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT