கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வாக்களித்த மக்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் செய்தி வெளியிட வேண்டும் - தமிழிசை

அரசியல் சூழலை, உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து விஜய் முதல்-அமைச்சராவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வாக்களித்த மக்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கும் வரக்கூடாது என்றும் விஜய் செய்தி வெளியிட வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது... அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது... அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை... மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் தான் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை...

ஆனால் ஆக்கபூர்வமாகவும் உண்மை பூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டிய இன்றைய அரசியல் சூழலை, உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் சகோதரர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொள்வதும், வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்க கூடியதாக இருக்கிறது.

உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு விஜய் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் தங்களுக்கு வாக்களித்த மக்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கும் வரக்கூடாது என்பதையும் அன்பான வேண்டுகோளாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.