தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதே நாளில் அரியணை ஏறும் விஜய்!

2021-ம் ஆண்டு மே 7-ந்தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றார்.

சென்னை,

தமிழகத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். 1969-ம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக கருணாநிதி பெறுப்பேற்றார். 1971-ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று கருணாநிதி முதல்-அமைச்சராக தொடர்ந்தார்.

அதன் பிறகு, திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அதிமுகவை தொடங்கிய பிறகு 1977, 1980, 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில், அக்கட்சியே தொடர் வெற்றி பெற்று எம்.ஜி.ஆரே முதல்-அமைச்சராக இருந்தார்.

தொடர்ந்து, 1989, 1996, 2006 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 6-வது முறையாக வெற்றி பெற்று முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்றது 7-5-2021. அதே நாளில் (7-5-2026) தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்க இருக்கிறார். இதற்கான பதவியேற்பு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.