தமிழக செய்திகள்

கடலூர், தருமபுரியில் விஜய் நாளை பிரசாரம்

விஜய், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

சட்டசபை தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் பிரசாரம் செய்த போது வழி நெடுக ஏராளமான தொண்டர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் பிரசாரம் செய்ய சென்ற அனைத்து இடங்களிலுமே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் விஜய் நாளை (18-ந்தேதி) கடலூர், தர்மபுரி ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக விஜய் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு முதலில் கடலூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து வேன் மூலம் கடலூர் தொகுதியில் 'ரோடு ஷோ' சென்று பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்.

கடலூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் தர்மபுரி செல்கிறார். வேன் மூலம் தர்மபுரி தொகுதியில் 'ரோடு ஷோ' சென்று தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். பின்னர் அவர் சென்னை திரும்புகிறார்.

அதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி திருவள்ளூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காரில் சாலை மார்க்கமாக திருவள்ளூர் செல்கிறார். பின்னர் வேனில் நின்ற படியே திருவள்ளூர் தொகுதியில் 'ரோடு ஷோ' சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் சென்னை திரும்புகிறார்.