தமிழக செய்திகள்

அண்ணா.. எம்.ஜி.ஆர். வரிசையில்.. முதல்-அமைச்சர் விஜய்.. கோட்டையில் பொறுப்பேற்றார்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

போதைப்பொருள் தடுப்பிற்கு தனி காவல் நிலையங்கள்

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய்க்கு தெலுங்கானா முதல்-மந்திரி வாழ்த்து

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள விஜய் அவர்களே, ராகுல்காந்தி அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு முதல்- அமைச்சராக பதவியேற்ற உங்களுக்கு என் வாழ்த்துகள்.

தமிழ்நாடு முதல்-அமைச்சராக, நீங்கள் ஏழைகளுக்கு நலனையும், அனைவருக்கும் நீதியையும் வழங்கி, உங்கள் மாநிலத்தை வளர்ச்சியில் பெரும் உயரங்களுக்குக் கொண்டு செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மனமார்ந்த வாழ்த்துகளும் நல்வாழ்த்துக்களும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு பவன் கல்யாண் வாழ்த்து

ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புதிய அரசு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, வெளிப்படையான மற்றும் முற்போக்கான ஆட்சியை உறுதிசெய்து, தமிழகத்தை மேலும் வளர்ச்சி மற்றும் செழிப்பின் பாதையில் வழிநடத்தும் என்று நான் விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான டாக்டர் பி. செந்தில்குமார், ஐ.ஏ.எஸ்., அவர்கள், முதல்-அமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்/செயலாளர்-I ஆக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசுச் செயலாளரான ஜி. லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ்., அவர்கள், முதல்-அமைச்சரின் செயலாளர்-II ஆக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலே பத்திகள் 1 மற்றும் 2-இல் உருவாக்கப்பட்ட முதல்-அமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்/செயலாளர்-I மற்றும் செயலாளர்-II ஆகிய பதவிகள், ஐ.ஏ.எஸ் (ஊதிய) விதிகள், 2016-இன் அட்டவணை II-A-வில் குறிப்பிடப்பட்டுள்ள "தலைமைச் செயலாளர்" மற்றும் "கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்" ஆகிய பணிநிலைப் பதவிகளுக்கு தகுதியிலும் பொறுப்புகளிலும் சமமானவை என அரசு அறிவிக்கிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“த.வெ.க. தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்!” - மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வென்றார்

17வது சட்டப்பேரவை நாளை கூடுகிறது

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகரின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்

நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது

வரும் 12-ம் தேதியன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.

அண்ணா.. எம்.ஜி.ஆர். வரிசையில்.. முதல்-அமைச்சர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார் முதல்-அமைச்சர் விஜய். முன்னதாக அங்கு அளித்த காவல்துறை மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற உள்ளது.

அண்ணா.. எம்.ஜி.ஆர். வரிசையில் கட்சி தொடங்கி 27 மாதங்களில் ஆட்சிக்கு விஜய் வந்துள்ளார். இந்த வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

“த.வெ.க.வின் ஒரே பவர் சென்டர் நான்தான்..” - முதல்-அமைச்சர் விஜய் பரபரப்பு பேச்சு

முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது;

”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான். எனக்கு வறுமை, பசி எனக்கு தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் கிடையாது. உங்களில் ஒருவன். உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன், உங்கள் தம்பி மாதிரி தான் நான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைப்பதால் தான் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறீர்கள்.

உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை, ’நாங்கள் இருக்கிறோம்.. பார்த்துக்கலாம்’ என அன்பாக, உறவாக ஏத்துக்கொண்டீர்கள். எனக்காக கூட நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள், அவமானங்களை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் என் கூடவே நின்று இன்று ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கி உள்ளீர்கள்.

எது சாத்தியமோ அதுமட்டும்தான் நான் செய்வேன். அப்போ சாத்தியம் இல்லாத்தை செய்ய மாட்டியா? என நீங்கள் கேள்வி கேட்பது தெரிகிறது. இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதி எனக்கு உள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. 10 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன இருக்கு, எது இல்லை என்பதை உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளேன். அதன் பின்னர் முன்னோக்கி செல்ல உள்ளேன்.

இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள். அதேபோல எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். போதைப்பொருளை ஒழிப்பேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள்தான்.

ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்தில் ஒரு பைசவும் தொட மாட்டேன். விஜய் தப்பு பன்ன மாட்டான். தப்பு பன்னவும் விடமாட்டான். என் கூட இருப்பர்களாக இருந்தாலும் சரி. நாம் ஜெயித்துவிட்டோம். ஒரு ஆட்டம் ஆடி பார்த்துவிடலாம் என நினைப்பர்வர்கள் இப்பவே சென்றுவிடுங்கள். இங்கு ஒரே பவர் செண்ட்டர்தான்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் என அனைவரும் நமது அரசில் நல்லா இருப்போம். சிறுபாண்மை சகோதரர்களுக்காக நமது அரசு கூடவே இருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

விஜய்யின் குட்டி நண்பா, நன்பிகளுக்கு நன்றிகள். உங்களுக்காக அனைத்து நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான். முக்கியமாக தமிழக வெற்றிக்கழக தோழர்களுக்கு எனது நன்றிகள். எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. இது ஒரு புதிய தொடக்கம். மீண்டும் மீண்டும் சந்திப்போம். வணக்கம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

இருமாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: பதவியேற்பு மேடையிலேயே முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்-அமைச்சர் விஜய். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் விஜய் கையெழுத்திட்டார்

முதல்-அமைச்சர் விஜய்யை தொடர்ந்து.. அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இதற்கான விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. கவர்னர் அர்லேகர், விஜய்க்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் த.வெ.க.வை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

”வந்தே மாதரம்” பாடலுடன் விஜய் பதவியேற்பு விழா தொடங்கியது

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தற்போது ”வந்தே மாதரம்” பாடலுடன் விஜய் பதவியேற்பு விழா தொடங்கி உள்ளது.

மேடைக்கு வந்தார் விஜய்.. சற்று நேரத்தில் தொடங்கும் புதிய வரலாறு

தமிழக முதல்- அமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய் மேடையில் அமர்ந்துள்ளார். அவருடன் தமிழக கவர்னர், முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். சற்று நேரத்தில் புதிய வரலாறு தொடங்க உள்ளது.

பதவியேற்பு விழா: கவர்னர் வருகை: பொன்னாடை அணிவித்து வரவேற்ற விஜய்

தமிழக முதல்- அமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தந்த கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்

பதவியேற்பு விழா: வெள்ளை சட்டை, கருப்பு கோட் சூட் அணிந்தபடி விஜய் வருகை

விரைவில் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வெள்ளை சட்டை, கருப்பு கோட், கருப்பு பேன்ட் அணிந்தபடி வருகை தந்துள்ளார்.

கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் ராஜேந்திர அர்லேக்கர்

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்காக கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் புறப்பட்டார்

விஜய் பதவியேற்பு விழா - நேரு ஸ்டேடியம் வந்தார் ராகுல் காந்தி

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. அவருக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், முதன் முதலில் ஆதரவு கரம் நீட்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் தான்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு பிரயத்தனத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் என தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து விஜய்யை முதல்-அமைச்சராக பதவியேற்க கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்காக ராகுல்காந்தி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, நேரடியாக பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தற்போது வருகை தந்துள்ளார்.

நேரு ஸ்டேடியத்தில் இன்னும் சற்று நேரத்தில் முதல்-அமைச்சராக பதவியேற்கிறார் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழக முதல்-அமைச்சராக சற்று நேரத்தில் பதவியேற்க உள்ள நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர் , நடிகைகள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

முதல் வரிசையில் முதல்-அமைச்சரின் இருக்கைக்கு நேர் எதிரே விஜய்யின் பெற்றோர் இருக்கை

தவெக தலைவர் விஜய் இன்று தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல் வரிசையில் முதல்அமைச்சரின் இருக்கைக்கு நேர் எதிரே விஜய்யின் பெற்றோர் இருக்கை அமர்ந்துள்ளனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய்

பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். தவெக தலைவர் விஜய்கு பூங்கொடுத்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் பதவியேற்பு விழா - நேரு ஸ்டேடியத்தில் நடிகை திரிஷா

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவிற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ள சினிமா நண்பர்களுடன் உற்சாகமாக உரையாடினார்.

காலை 10 மணியளவில் நேரு ஸ்டேடியத்தில் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர் அர்லேகர்.

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்கும் நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 12 இணை ஆணையர் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேரு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக வெளியானது அமைச்சரவை பட்டியல்

விஜய்யுடன் சேர்த்து அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்கும் நிலையில் அவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார்.ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்கின்றனர்.

விஜய் அளித்த 9 பேர் அமைச்சரவை பட்டியலை ஏற்று கொண்டதாக கவர்னர் மாளிளை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

விஜய் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது

நேரு விளையாட்டரங்கத்திற்கு வந்தார் விஜய். அவருக்கு பூங்கொடுத்து கொடுத்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நாளை பதவியேற்கின்றனர். மே 13-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு கவர்னர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தார் ராகுல் காந்தி

‘சி.ஜோசப் விஜய் ஆகிய நான்....’ - நேரு விளையாட்டு அரங்கில் ஒலிக்கப்போகும் அந்த வார்த்தை

முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்காக கவர்னர், 'ஐ' (நான்) என்று ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணத்தை தொடங்கி வைத்ததும், விஜய் தமிழில், 'சி.ஜோசப் விஜய் எனும் நான்...' என்று உறுதிமொழியை வாசிப்பார். அதுபோல ரகசிய காப்பு உறுதிமொழியையும் கவர்னர் தொடங்கி வைக்க, விஜய் அதை தொடர்ந்து படிப்பார்.

விஜய் வாயில் இருந்து ஒலிக்கப்போகும் இந்த வார்த்தைக்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் நீண்ட நாளாக காத்திருந்தனர். அவர்களது கனவு இன்று நிறைவேறப்போகிறது. விஜய்யை தொடர்ந்து. அவரது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை வாசிப்பார்கள்.

முன்னதாக தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் விருந்தினர் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படும்.

பின்னர் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து நேராக தலைமைச்செயலகம் செல்வார்கள். அங்கு முதல்-அமைச்சர் அறையில் உள்ள இருக்கையில் விஜய்யை மூத்த அமைச்சர்கள் அமர வைப்பார்கள்.

பதவியேற்பு விழா: தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்

த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ளவருமான விஜய், தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று ஜவஹர்லால் நேரு மைதானத்தில் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர்

த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று அன்னையர் தினம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...” என்று கூறினார்.

முதல்-அமைச்சர் பதவியேற்பு விழா - சுமார் 6,000 பேருக்கு அனுமதி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பாஸ் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கு அமைந்துள்ள பெரியமேடு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் இல்லாதவர்கள் வருவதை தடுக்க சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய் பதவியேற்பு விழா: நேரு ஸ்டேடியத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருகை

தவெக தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ஆதவ் அர்ஜுனா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளார்.

விஜய்யின் சென்னை இல்லத்தில் கான்வாய் வாகனங்கள் அணிவகுப்பு

இன்று தமிழக முதல்-அமைச்சராகப் பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்யின் சென்னை இல்லத்தில் கான்வாய் வாகனங்கள் வருகை தந்துள்ளது.

பதவியேற்பு விழா: விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை

த.வெ.க. தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விஜய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

சென்னையில் விஜய் பதவியேற்பு விழா: டெல்லியில் இருந்து கிளம்பிய ராகுல் காந்தி

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து கிளம்பி உள்ளார்.

விஜய் பதவியேற்பு விழா நேரலை: சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1. அண்ணாநகர் டவர் பார்க்

2. மெரினா கடற்கரை

3. கோயம்பேடு பேருந்து நிலையம்

4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம்

5. தி.நகர் பேருந்து நிலையம்

6. பெசன்ட் நகர் கடற்கரை

7. திருவான்மியூர் பேருந்து நிலையம்

8. கத்திபாரா நகர சதுக்கம்

9. செம்மொழிப் பூங்கா

10. தீவு திடல் பேருந்து நிறுத்தம்

11. நாகேஸ்வரராவ் பூங்கா

12. மயிலாப்பூர் டேங்க் ஏரியா

13. வடபழனி பேருந்து நிலையம்

14. எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி

15. சோழிங்கநல்லூர் சந்திப்பு

16. மாதவரம் பேருந்து நிலையம்

17. போரூர் சந்திப்பு

18. அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்

19. தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பகுதி

20. அடையாறு டிப்போ சந்திப்பு

மேற்கண்ட இடங்களில் எல்.இ.டி திரையின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த கட்சிகள்

த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன.

தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.

108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க.

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டது.