கோவை,
கோவை கணபதி பகுதியை சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், கடந்த 21ம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரைக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ‘குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதல், பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்துவதாகும். இதனால் எனது 5 வயது மகன் விஜய்க்கு வாக்களிக்குமாறு என்னிடம் அடம்பிடித்தான்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதும், உணவை தவிர்த்தும் த.வெ.க-விற்கு ஓட்டு போடுமாறு பிடிவாதம் பிடித்தான்.
இதனால் அக்கட்சிக்கு தான் ஓட்டு போட்டதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன் என எனது மகன் தொடர்ந்து அழுது வருகிறான்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த விஜயின் செயலால், பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடுவேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.