சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசகருமான பொன்ராஜ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த 2வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பொன்ராஜூக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று தடை விதித்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.