தமிழக செய்திகள்

விஜய் ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது - செல்லூர் ராஜு விமர்சனம்

தவெக-வில் உள்ள பெண்களுக்கே விஜய் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

மதுரை,

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து தேர்ந்தெடுத்த ஆட்சியில் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக குதிரை பேரம் நடத்தி வருகிறார். சினிமா வசனம் பேசுவதைப் போன்று பேசிவிட்டு, தமிழக மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுத்து வருகிறார். சிறை மரணங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார். பெண்களுக்கு எதிரான துன்பங்களும், துயரங்களும் அதிகரித்துள்ளன. தவெக-வில் உள்ள பெண்களுக்கே விஜய் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்ட இன்னலை கண்டித்து எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. சார்பில் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தவெக தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து மதுரையில் உள்ள அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேட்டபோது, அதுதொடர்பான தகவல்கள் வதந்தி என்றும், மாவட்ட ஆட்சியர் புகார் கொடுக்கட்டும் என்றும் தெரிவித்தார். தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் முதல்-அமைச்சர் குரல் கொடுப்பதில்லை. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மலை மீது தீபம் ஏற்றினால் அசாதாரண சூழல் ஏற்படும் என தெரிவித்த மாவட்ட ஆட்சியரே, தீபம் ஏற்றுவதற்கான சட்டியை எடுத்துச் சென்று தீபம் ஏற்றியுள்ளார். மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது.

உரிய அங்கீகாரம்

தீபம் ஏற்றும் நிகழ்வின்போது பாதுகாப்புப் பணியை சி.ஆர்.பி.எப். வீரர்கள் மேற்கொண்டனர். தமிழக காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றும் திறன் கொண்டவர்கள். இருப்பினும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டது. முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற விரும்பி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊழல் பட்டியலில் தவெக நிர்வாகிகள் பலர் இடம்பெற்றுள்ளனர். அரசுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT