தமிழக செய்திகள்

தமிழ்நாட்டைப் பொருளாதாரப் படுகுழியில் தள்ளிய விஜய் அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

நிதி ஆதாரத்தையே முடக்கிப்போடும் இந்த மோசமான ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதலபாதாளத்திற்குச் சென்ற தமிழகத்தின் ஜி.எஸ்.டி வருவாய். தமிழ்நாட்டைப் பொருளாதாரப் படுகுழியில் தவெக அரசு தள்ளியதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வரி வருவாய் வீழ்ச்சி

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வெற்றுப் பேச்சுக்களாலும் சமூக வலைதளப் புகழ்ச்சிகளாலும் ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்திவிட முடியாது என்பதை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஜி.எஸ்.டி வரி வசூல் புள்ளிவிவரங்கள் அப்பட்டமாக நிரூபித்துவிட்டன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் (Year-on-Year), இந்த 2026-ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களாகவே (ஜூலை -1%, ஆகஸ்ட் -1%, செப்டம்பர் -5%) தமிழ்நாடு தொடர்ந்து வரி வருவாய் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. உத்தரப் பிரதேசம் (18%), குஜராத் (17%), கர்நாடகா (16%), மகாராஷ்டிரா (15%) எனப் பிற முக்கிய மாநிலங்கள் கடந்த ஆண்டை விட அபார வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தவெக ஆட்சியில் தமிழ்நாடு மட்டும் தொடர்ச்சியாக 3 மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து அதலபாதாளத்திற்கு சரிந்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

தொழில்துறையையும் வர்த்தகத்தையும் வழிநடத்தத் தெரியாத தவெகவின் அனுபவமின்மையே இந்தத் தொடர் ஜி.எஸ்.டி வீழ்ச்சிக்கு நேரடிக் காரணம். அரசுக்கு வருமானத்தை ஈட்டவும், நிதி நிர்வாகத்தைச் சரியாகக் கையாளவும் திறனில்லை; மாறாக, கவர்ச்சி அறிவிப்புகளையும், சினிமாப் பாணி விளம்பரங்களையும் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய். தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தையே முடக்கிப்போடும் இந்த மோசமான ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெள்ளை அறிக்கை வேண்டும்

எனவே, மாநிலப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்திய தவெக அரசு, தொடர்ந்து 3 மாதங்களாக ஜி.எஸ்.டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். வெற்று முழக்கங்களால் நிதி நெருக்கடியை இனியும் மறைக்க முடியாது; முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நிதி நிர்வாகத்தைச் சீரமைக்காவிட்டால், இந்தச் சீர்கேட்டிற்கு மக்கள் மன்றத்தில் தவெக அரசு கடுமையான பாடத்தைக் கற்க நேரிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT