விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண். இவரும், வெங்காயக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பால் வேன் டிரைவராக வேலை பார்த்து வரும் வீரப்பன் மகன் மயிலரசன் (வயது 25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மயிலரசன் அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதில் இளம் பெண் கர்ப்பமானார். இதன்பின், மயிலரசன் மாத்திரைகளை வாங்கிக்கொடுத்து கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மயிலரசனிடம் இளம் பெண் கூறிவந்த நிலையில், அவரை திட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம் பெண் நேற்று முன்தினம் மாலை விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளம் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக மயிலரசன் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.