மதுரை,
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தர்மமுனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின்னர் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே இருந்தவர் என்பது தெரியவந்தது.
இந்த சூழலில், மாணவியின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த ஆண்டு நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீனில் வெளியே இருந்தபோதுதான் அவர் எங்கள் மகளைக் கொலை செய்துள்ளார். எனவே அந்தப் பழைய வழக்கில் எங்களை எதிர்மனுதாரராகச் சேர்த்து, தர்மமுனீஸ்வரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டியும், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டியும், மாணவியின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மாணவியின் பெற்றோருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்த அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்” எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.