தமிழக செய்திகள்

விளாத்திகுளம் மாணவி கொலை ; குற்றவாளி பிடிபட்டது எப்படி? பரபரப்பு தகவல்

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி கைதாகியுள்ளான்.

விளாத்திகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி கடந்த 11-ந் தேதி அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. 10-வது நாளாக இன்றும் மாணவியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குற்றவாளியைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. சந்தேகத்திற்குரிய மற்றும் குற்றப்பின்னணி கொண்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சிலரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். முனீஸ்வரன் கைதானது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களில் மூனிஸ்வரனின் கையில் நகக் கீறல்கள் இருந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் சதைத் துணுக்குகள் சிக்கியிருந்தன. அந்த சதையுடன் டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் முனீஸ்வரனின் மாதிரிகள் ஒத்துப்போனது. இதனைத் தொடர்ந்து, முனீஸ்வரனை முறையாக போலீஸார் கைது செய்துள்ளனர்.