தமிழக செய்திகள்

பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்; கிராம நிர்வாக அலுவலர் கைது

வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

சேலம்,

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு செல்வதற்காக அந்த சிறுமி, பைபாஸ் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு மாணவி எதற்காக நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர், மாணவியிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரது கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். பின்னர் மாணவி, சத்தம் போட்டு கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் அங்கு அதிகளவு கூட்டம் கூடியது.

இதையடுத்து அங்கு வந்தவர்களிடம் நடந்த விவரத்தை மாணவி எடுத்து கூறியதால் அவர்கள் ஆவேசம் அடைந்து அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து சிறைபிடித்து வைத்தனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் அந்த நபர் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் எருமாபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 43) என்பதும், அவர் வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.