திருப்பூர்,
பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த மாதப்பூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி (78 வயது). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை சப்-டிவிசன் செய்து பட்டா பெயர் மாறுதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
அதன்பின்னர் வீரசோழபுரம் கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாரை (36 வயது) சந்தித்து, தனது விண்ணப்பம் குறித்து கேட்டார். அப்போது அவர், நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்து தர வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கறாராக கூறினார்.
இதையடுத்து, முதல் கட்டமாக ரூ.10 ஆயிரத்தை கடந்த மாதம் 26-ந்தேதி கிராம நிர்வாக அதிகாரியிடம், ராமசாமி கொடுத்தார். மீதி தொகையை இரண்டு தவணைகளாக தருவதாக கூறினார். ஆனால் அதன் பின்னர் மீதி பணத்தை கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ராமசாமிக்கு விருப்பம் இல்லை.
இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் அளித்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாரை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ஆகியோர் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை ராமசாமியிடம் கொடுத்தனர். அந்த பணத்தை, கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி, ராமசாமி ரசாயனம் தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாரிடம் பணத்தை கொடுத்தார். இதையடுத்து அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, லஞ்ச பணத்துடன் அருண்குமாரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கைதான கிராம நிர்வாக அதிகாரியின் சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த பழையக்கோட்டை புதூர் என்பது குறிப்பிடத்தக்கது.