தமிழக செய்திகள்

கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமிக்கவோ உரிமை கோரவோ முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வருவாய் துறை உத்தரவுகளின்படி, நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டவும், பொது பயன்பாடுகளுக்காகவும் ஒதுக்க வேண்டிய கிராம நத்தம் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உள்ள கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடையை அப்புறப்படுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து கடை உரிமையாளர் செல்வகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர், ''ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்கிறோம். மேலும், கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது. இதை அனுமதித்தால் அது சட்டமற்ற நிலையை உருவாக்கிவிடும். வருவாய் துறை உத்தரவுகளின்படி, நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டவும், பொது பயன்பாடுகளுக்காகவும் ஒதுக்க வேண்டிய கிராம நத்தம் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.

அதேநேரம், இதுபோன்ற கிராமநத்தம் நிலங்கள் என்பது, பேராசை பிடித்தவர்கள், ஆள்பலம், அரசியல் பலம் கொண்டவர்களால் ஆக்கிரமிப்பதற்கானது அல்ல'' என்று உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT