திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் அருகே சாமராயப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமராவதி ஆற்றின் கரையோரம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஒற்றைப் பாறையின் மீது, கல்யாண விநாயகர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இங்குள்ள தெய்வங்கள் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையன்று மழை வேண்டி கஞ்சி ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இந்த புனித வழிபாடு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று கோவில் வளாகத் தில் நடந்தது. இதையொட்டி விவசாய வளம் பெருகவும், உலக நன்மைக்காக மழை வேண்டியும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த "பாறை கஞ்சி ஊற்றும் வழிபாடு" நேற்று நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள கஞ்சி காய்ச்சும் அறையில் கஞ்சி தயார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சாமி தரிசனம் செய்த பக்தர்கள், பிரம்மாண்ட பாறைப் பரப்பிலேயே வரிசையாக அமரவைக்கப்பட்டனர். இங்கு உணவு அருந்துவதற்கு வாழை இலையோ, தட்டோ அல்லது வேறு எந்தவொரு பாத் திரங்களோ யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்பது இத்த லத்தின் மிக முக்கிய அம்சமாகும். வழிபாட்டு மரபுப்படி, சுடச் சுடத் தயார் செய்யப்பட்ட கஞ்சியானது நேரடியாகப் பாறைப் பரப்பிலேயே ஊற்றப்பட்டு பரிமாறப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாறையில் அமர்ந்து கஞ்சியை பருகி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இயற்கையையும், மண்ணையும், மழையையும் இறைவனாகக் கருதி தொழும் விவசாயக் குடும்பங்களின் நெஞ்சார்ந்த நம் பிக்கையையும், சாதி-மத பேதமற்ற கிராமத்து ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்ததிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.