திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “மக்களை தேடி மாவட்ட காவல்” என்ற சிறப்பு திட்டத்தின் முதலாவது மக்கள் குறைதீர் முகாம் நேற்று திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை, மேல தாழையூத்து குவாரி ரோடு அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாவட்ட காவல் அலுவலகத்தின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கும் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்த மக்கள் குறைதீர் முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் தாழையூத்து பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட தாழையூத்து, கங்கைகொண்டான், மானூர், தேவர்குளம், சீதபற்பநல்லூர், தாலுகா, சிவந்திபட்டி, சீவலப்பேரி மற்றும் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 9 காவல் நிலைய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட எஸ்.பி.யிடம் வழங்கினர். எஸ்.பி. ஒவ்வொரு பொதுமக்களிடமும் தனித்தனியாக பொறுமையுடன் குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து விசாரித்து நிரந்தரமான மற்றும் விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பேசியபோது, “திருநெல்வேலி மாவட்ட மக்கள் காவல்துறைக்கு வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு ஊரில் சிலர் தவறு செய்வதற்காக முழு ஊரையும் குற்றம்சாட்டுவது சரியல்ல. தவறு செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், நல்லது செய்பவர்களை பாதுகாப்பதே காவல்துறையின் முக்கிய கடமை” என்று தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து எந்த நேரத்திலும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் “உங்களுடன் உங்கள் எஸ்.பி.” என்ற பெயரில் ஒரு கைப்பேசி எண்ணையும் அவர் அறிவித்தார்.
அத்துடன், “கிராமத்து காவல் திட்டம்” என்ற புதிய திட்டத்தையும் மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் வாரத்திற்கு மூன்று முறை நேரடியாக சென்று மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து அதை மாவட்ட எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “மக்களை தேடி மாவட்ட காவல்” மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு வாரமும் மாவட்டத்தின் வெவ்வேறு உட்கோட்டங்களில் நடைபெறும் என்றும், அதன் பின்னர் அந்த பகுதிகளை மாவட்ட எஸ்.பி. நேரடியாக ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 3 மாதத்திற்குள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் வைப்பதற்கு இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.