தமிழக செய்திகள்

தெருநாய்களை பிடிக்கக்காரி கிராம மக்கள் சாலை மறியல்

உப்பிலியபுரம் அருகே தெருநாய்களை பிடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

உப்பிலியபுரம் அருகே தெருநாய்களை பிடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தெருநாய்கள்

உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம், காட்டுக்கொட்டகை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை கடித்து கொன்று வருகிறது.

கடந்த ஒருமாதத்தில் சுமார் 100 ஆடுகள், கன்றுக்குட்டிகள், பசுமாடுகளை கடித்துக் குதறி உள்ளன. இதில் பல ஆடுகள் இறந்து உள்ளன. எனவே அந்த நாய்களை பிடிக்க கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆடுகள் செத்தன

இந்த நிலையில் நேற்று காட்டுக்கொட்டகையைச் சேர்ந்த மல்லிகாவின் ஆடுகள், ஜெயராமனின் கன்றுக்குட்டி உள்பட 5 ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறியதில் 3 ஆடுகள் செத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செத்த ஆடுகளை ஊராட்சி அலுவலகம் முன்பு போட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத கிராம மக்கள் இறந்த ஆடுகளை கொப்பம்பட்டியிலிருந்து கோட்டப்பாளையம் செல்லும் சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீசார் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.