தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே உள்ள சந்திரகிரி, கீழசெய்த்தலை, கொல்லம்பரும்பு, முல்லூர் ஆகிய கிராமங்களுக்கு அருகே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கல்குவாரியில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடிகளால் நில அதிர்வு ஏற்பட்டு, அருகிலுள்ள கிராமத்து வீடுகளில் கீறல்கள் விழுகின்றன. குவாரிப் பணிகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் மூலம் கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. லாரிகளின் தொடர் போக்குவரத்தால் குறுக்குச்சாலை- சந்திரகிரி- குளத்தூர் சாலை முற்றிலும் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்தக் கல்குவாரியை மூடக்கோரி மக்கள் பலமுறை போராடியும், மாவட்ட நிர்வாகம் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"எங்கள் கோரிக்கைக்கு உரியச் செவிசாய்க்காவிட்டால், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்போம்" என கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் நிர்வாகத் தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.