நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட படுகர் சமுதா யத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்து உள்ளதாக கூறி கிராமத்தை காலி செய்யுமாறும், தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தங்களது கிராமம் வன நிலமாக எப்படி சேர்க்கப்பட்டது? என கேள்வி எழுப்பி வருவதுடன், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதற்காக அஜ்ஜூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கிய வனத்துறையை கண்டித்து அஜ் ஜூர் கிராமத்தை சேர்ந்த 818 வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 6 மணி நேரம் ஒரு வாக்கு கூட செலுத்தாமல் தேர்தலை புறக்கணித்தனர்.
பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்தால் அனைவரும் வாக்களிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வாக்குச்சாவடியில் 941 வாக்காளர்கள் உள்ள நிலையில், அதன் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 14 பேர் மட்டுமே வாக்களித்தனர். அஜ்ஜூர் கிராம மக்கள் ஓட்டு போட வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் கிராம மக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ஒட்டுமொத் தமாக நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக கூறியதால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். அதன் பின்னர் கிராம மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.