சென்னை,
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு வடிவங்களில் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த விநாய கர் சிலைகளுக்கு காலை மற்றும் மாலை வேளையில் பூஜை கள் செய்யப்பட்டன.
சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் மாநகராட்சியுடன் இணைந்து போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்தனர்.
இதனையடுத்து சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை சுற்றியுள்ள தெருக்களுக்குள் விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க முதலில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் வழிபட்டனர். அதன்பின்னர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
மினி லாரி, டிராக்டர், டாரஸ் லாரி போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஏற்றி, இந்து அமைப்பினர், வாலிபர்கள் ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டத்துடன் வலம் வந்தனர். பட்டினப்பாக்கத்தில் பெரிய விநாயகர் சிலைகளை அலேக்காக தூக்கி கடலில் கரைக்கும் பணியில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. விநாயகர் சிலைகளை சுமந்து வருவதற்கு கிரேன் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. மேலும் விநாயகர் சிலைகளை சுலபமாக வைத்து தள்ளி செல்வதற்காக 'டிராலி' வசதியும் செய்யப்பட்டிருந்தது. அதன் மூலமாகவும் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து 120 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் ரசாயன வண்ணப் பூச்சுகளால் செய்யப்பட்ட சிலைகள் எளிதில் கரையாததால், உடைந்து உருக்குலைந்த நிலையில் கடற்கரையில் தேங்கியுள்ளன.
கரை ஒதுங்கும் சிலைகள், மரச்சட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவது, கிரேன் நிறுத்தத்திற்காக போடப்பட்ட மண் மேடை ஆகியவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பெரிய சிலைகளை மீண்டும் கடலில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தூட்மை பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.